கால்நடை தீவனத்திற்காக வளர்க்கப்படும் புல்லை விவசாய பயிராக பெயரிட விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கால்நடைத் தீவனத்திற்குத் தேவையான புல் நிறுவன் அல்லது தனிப்பட்ட முறையில் முறையாக பயிரிடப்படாததால், கால்நடைத் தீவனத்திற்குப் போதுமான புல் கிடைக்காமை இலங்கையின் கால்நடை உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பசுக்களில் இருந்து தினசரி பெறும் பால் அளவு குறைந்து வருவதற்கு உயர்தர புல் இல்லாதமை ஒரு காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, மற்ற பயிர்களை பயிரிட முடியாத நிலங்களில், அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர புல் வகைகளான CO3, CO5, பச்சோன் (Pachon), நேப்பியர்(Napier)வகை புல் வகைகளை பயிரிட விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் சுமார் 47,000 ஏக்கர் தரிசு விவசாய நிலங்கள் காணப்படுவதுடன், மேல் மாகாணத்தில் பயிர்களை விளைவிக்க முடியாத சுமார் 11,000 ஏக்கர் தரிசு நிலங்களும் இனங்காணப்பட்டுள்ளன.
விவசாயம் செய்ய முடியாத நிலங்களையும் தரிசு நிலங்களையும் தெரிவு செய்து அந்த நிலங்களில் கால்நடை தீவன உற்பத்திக்கு தேவையான புல்லை வளர்ப்பதற்கு தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.