2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) அஜித் ரோஹண ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினர்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 735 நபர்களில் 196 பேர் இன்னும் விளக்கமறியலில் இருப்பதாக ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர்களில் 79 பேருக்கு எதிராக 25,653 குற்றச்சாட்டுகளின் கீழ் 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

மேலும் 81 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற கூற்றை ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன நிராகரித்தார்.

இதேவேளை, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிடமிருந்து 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக SDIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடமிருந்து 165 மில்லியன் ரூபா தங்கம் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version