இலங்கையில் மே – 9 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், இதுவரை அவர்கள் கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என நேற்று ( 25) அறிவிக்கப்பட்டது.
சட்ட மா அதிபர் சார்பில் இந்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன இதனைக் கோட்டை நீதிவான் திலின கமகேவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களான
பவித்ரா வன்னி ஆராச்சி,
ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ,
காஞ்சன ஜயரத்ன ,
நாமல் ராஜபக்ஷ,
ரோஹித்த அபே குணவர்தன,
சி.பி. ரத்நாயக்க,
நாடாளுமன்ற உறுப்பினர்களான
சஞ்ஜீவ எதிரிமான்ன,
சம்பத் அத்துகோரள ஆகியோருக்கும்
ரேனுக பெரேரா ஆகிய 9 பேருக்கும் நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்தது.
அத்துடன் அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்த, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ ஆகியோரின் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட, அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் பதிவான பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த நிலையில், கடமையை சரியாக செய்து வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் வெளிநாட்டுப் பயணமும் நீதிமன்றால் தடை செய்யப்பட்டது.
நேற்று ( 25) நீதிமன்றங்களில் விடயங்களை முன் வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன, கடந்த 12 ஆம் திகதி 24 பேருக்கு, சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையை விதித்து, அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், இதுவரை மஹிந்த ராஜபக்ஷ, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் இதுவரை தங்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றுக்கு பாரப்படுத்தவில்லை எனக் தெரிவித்துள்ளார்.