கஞ்சாவை ஏற்றுமதி செய்து பாாிய பொருளாதார நன்மைகளைப் பெறலாம் என்று வௌியிடப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மை இல்லை என்று மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கஞ்சா பாவனையை சட்டப்பூர்வமாக்குவதற்கு தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கஞ்சாவை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் செயற்திட்டமாக இதற்கு அனுமதி வழங்கப்படுமென விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கஞ்சா ஏற்றுமதி மூலம் பொருளாதார நன்மைகள் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்பது கஞ்சா நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகளின் தணிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
கஞ்சாவை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் உள்ள தரப்பினர் தற்போது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தமது இலக்குகளை அடைய முயற்சிப்பதாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக கஞ்சாவின் தற்போதைய நேர்மறையான சித்தாந்தங்கள் தொடர்ந்து பிரபலமடையும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் கஞ்சா போன்ற தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பிரபலமடையும் போது, ஏனைய போதைப்பொருட்களின் பாவனையும் அதிகரிப்பது சாதாரண விடயம் ஆகும்.
புகைத்தல் மற்றும் மது பாவனையால் நாளொன்றுக்கு சுமார் 100 பேர் உயிரிழப்பதாகவும் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் இலங்கையர்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபா வருமானம் ஈட்டுவதாகவும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.