அரசாங்கம் வழங்கும் நிவாரண கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன, ஏதாவது பிரதேசங்களில் அதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை நிவர்த்திக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (20.06.2023) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சந்திம வீரக்கொடி குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் மூத்த பிரஜைகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. அதேவேளை, வலது குறைந்தவர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவும் இவ்வாறு வழங்கப்படுவதில்லை.

அது தொடர்பில் நிதியமைச்சு உடனடி கவனத்தை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள் நிலையில் இதற்கு பதில் நிதி அமைச்சர் பதிலளிக்கையில்,

நிதி அமைச்சானது மக்களுக்கு வழங்கும் நிவாரண கொடுப்பனவுகளில் எத்தகைய குறைபாடுகளையும் வைக்கவில்லை. அவ்வாறான கொடுப்பனவுகள் உரிய காலத்தில் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஏதாவது பிரதேச செயலாளர் பிரிவிற்கு அந்த கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை யென்றால் நாம் சமூக ஊக்குவிப்பு அமைச்சின் மூலம் அதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட்ட33 இலட்சத்து 43110 பேரின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் நிதி அமைச்சர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகையில், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள 33 இலட்சத்து 43110 விண்ணப்பதாரர்களுக்கு ஜுலை முதல் வாரத்திலிருந்து நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கு தகுதிபெற்றுள்ளவர்களின் விபரங்கள் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதற்கமைய இம்மாதம் 30ஆம் திகதி வரை இது தொடர்பான ஆட்சேபனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

பாதிக்கப்பட்ட, வறுமை நிலைமையிலுள்ள, மிகவும் வறுமை நிலையிலுள்ள மற்றும் ஏழ்மையானவர்கள் என்ற 4 கட்டங்களின் கீழ் இந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் ஜுலை முதல் வாரத்திலிருந்து பயன் பெறுனர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படவுள்ளன.

தகுதியானவர்களின் விபரம் இணையத்தளத்தில்
இந்த வேலைத்திட்டத்தின் காரணமாக சமுர்த்தி வழங்கும் சேவை ஒருபோதும் நீக்கப்பட மாட்டாது. சமுர்த்திப் பயனாளிகளும் இதில் உள்வாங்கப்படுவர். நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்தக் கொடுப்பனவுகளை பெறத் தகுதியானவர்களின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலை சகல பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் காரியாலங்களிலும் பார்வையிட முடியும். அதற்கமைய விண்ணப்பதாரர்கள் 10 நாட்களுக்கு ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும்.

கிடைக்கப்பெறும் ஆட்சேபனைகள் உனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Share.
Exit mobile version