போதைப்பொருள் பாவைனையில் ஈடுபட்டு, வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேல்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமான போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்திய 41 சாரதிகள் இனங்காணப்பட்டதுடன், அவர்களில் 19 பேர் பஸ் சாரதிகள் என அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை போதைப் பொருட்களை பாவித்து வாகனம் செலுத்துபவர்களினால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படும் பொலிஸார், நாட்டில் பதிவாகும் விபத்துக்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டில் 23,704 விபத்துக்களில் மொத்தம் 2,370 பேர் உயிரிழந்தனர், 2021‍ ஆம் ஆண்டில் 22,847 விபத்துக்களில் 2,559 பேர் உயிரிழந்தனர், 2022 ஆம் ஆண்டில் 21,992 விபத்துக்களில் மொத்தம் 2,536 பேர் உயிரிழந்தனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு (2023) ஜனவரி 1 முதல் ஜூன் 18 வரை 8,875 விபத்துகளில் மொத்தம் 1,043 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version