நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் 902 விபத்துகளில் மரணங்கள் சம்பவித்துள்ளன , 1,856 விபத்துகளில் பாரிய காயங்களும், 3,951 விபத்துகளில் சிறு காயங்களும், 2,096 விபத்துகளில் சேதங்களும் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அரசு மற்றும் அனைத்து அரசு உதவி நிறுவனங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போதைப்பொருள் பாவனையே விபத்துக்களின் முக்கிய அம்சமாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என கண்டறியப்பட்டது.

இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, சுகாதார அமைச்சு, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) ஆகியவை இணைந்து மது அல்லது போதையில் வாகனம் செலுத்தும் ஓட்டுநர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மே 18 அன்று மேல் மாகாணத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது. ஜூன் 12 முதல் 6 நாட்களுக்கு போதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்கள் மீது மொத்தம் 1,781 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

போதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்ட 41 பேரில் பொது போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த 19 பேரூந்து சாரதிகள், 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒன்பது முச்சக்கர வண்டி சாரதிகள் அடங்குகின்றனர்.

இந்த சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றத்தால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர்களில் பலருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version