தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுனர்களுக்கான பயிற்சி காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரித்து, அவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்குவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சிகளை நிறைவு செய்த டிப்ளோமாதாரிகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் , மேல் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று இலங்கையில் 10 835 அரச பாடசாலைகளில் 2 இலட்சத்து 50 000 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
41 இலட்சம் மாணவர்கள் அரச பாடசாலைகளிலும் , ஒரு இலட்சத்து 50 000 மாணவர்கள் தனியார் பாடசாலைகளிலும் கல்வி கற்கின்றனர்.
நாட்டிலுள்ள 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளிலும் பயிற்சி பெறுகின்ற ஆசிரிய பயிலுனர்கள் டிப்ளோமாதாரிகளாக வெளியேறுகின்றனர்.
எனினும் இவர்கள் பயிற்சி பெறும் கால எல்லையை 4 வருடங்களாக அதிகரித்து , அவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்கி பட்டதாரி ஆசிரியர்களாக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது டிப்ளோமாதாரிகளாகவுள்ள ஆசிரியர்களுக்கு தமது உயர்கல்வியை தொடர்வதற்கான வசதிகளை கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கல்வித்துறையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். 2030ஆம் ஆண்டாகும் போது நவீன கல்வி முறைமையைக் கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைந்திருக்க வேண்டும்.
எனவே இன்று நியமனம் பெறும் உங்கள் அனைவருக்கும் இந்த இலக்கை அடைவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கான பொறுப்பும் கடமையும் காணப்படுகிறது. அதற்கான சகல வசதிகளையும் கல்வி அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.