ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்குத் தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி (Low level Road) புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பணிப்புரைகளை விடுத்தார்.

வெளிநாட்டு உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முழுமையான வீதியின் நீளம் 7.7 கி.மீ ஆகும். 2023 மே மாத நிலவரப்படி, இதன் முதல் கட்ட நிர்மாணப் பணிகளின் பௌதீக முன்னேற்றம் 85% ஆகவும், இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் பௌதீக முன்னேற்றம் 80% ஆகவும் உள்ளது.

Share.
Exit mobile version