தென் கொரியாவில் வேலை தருவதாகக் கூறி விண்ணப்பங்களை பெற்று பணம் வசூலித்து ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பேராதனை, கெட்டம்பே பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்ற போதிலும், தென்கொரியாவில் தொழில் வழங்குவதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது நேர்முகத் தேர்வுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு நபர்களின் 275 கடவுசீட்டுகள், 615 வேலை விண்ணப்பங்கள் மற்றும் பொலிஸ் சான்றிதழ்கள், கொரிய மொழியில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய கோப்பு கொரியாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதைக் குறிக்கும் பேனர் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சந்தேகநபரின் மோசடியில் 3000க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.