அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன தனது இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று (13) தெரிய வந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமான வரியை செலுத்தத் தவறியதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அழைப்பாணையை கையளிப்பதற்காக பிரதிவாதியின் பொரளை வாசஸ்தலத்திற்கு சென்றிருந்த போதிலும், அவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பான வேறு ஏதேனும் முகவரியை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share.
Exit mobile version