ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்காக அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் நேற்று பிற்பகல் கூடி ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். அதனை அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஜனாதிபதி, அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் அழைப்பு விடுக்கும் கலந்துரையாடல்களில் பங்கேற்பதில்லை என்றும் கட்சி சார்ந்த கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் மட்டுமே கலந்து கொள்வதெனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி அல்லது அமைச்சர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் யாரை அழைப்பதாக இருந்தாலும் குறிப்பாக அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டங்களுக்கு கட்சி ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது கட்சி உறுப்பினர்களையும் தலைவர்களையும் அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு அழைப்பதாயின் அதுகுறித்து முதலில் கட்சித் தலைமைக்கு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Share.
Exit mobile version