கடந்த 3 ஆண்டுகளில், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதைச் சம்பவங்கள் மற்றும் பதிவான வழக்குகளின் விசாரணைகள் குறித்து தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின்போது, பாரவூர்தி ஒன்றின் டயர் ஒன்றை மாடிப்படியில் இருந்து கீழே உருட்டியதால், மாணவனின் தலை, மண்டை ஓடு, மூளையில் காயம் உள்ளிட்ட பலத்த உடற் காயங்கள் ஏற்பட்டன.

இந்தநிலையில், குறித்த நபர் இதுவரையில், முழுமையாக குணமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு குறித்த மாணவனின் சகோதரியால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைகளின்போது பகிடிவதை என்பது பல்கலைக்கழக கல்வியில் உடலியல் மற்றும் நடத்தை சார்ந்த விடயங்களில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்து.

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள சகல அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோரை இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்கல்வி அமைச்சருக்கு தேசியக் கொள்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்க அதிகாரம் உள்ளதால் அவரையும் பிரதிவாதியாக குறிப்பிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாம் 29ஆம் திகதி வரை உயர்நீதிமன்றம்; ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version