அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவுசெய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவினால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும், “CVCD Excellence Awards” விழாவில், இலங்கைப் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள நிபுணர்களினால் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் சிறந்த பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் பாராட்டப்பட்டன.

இலங்கை உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் தலைவரும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான பேராசிரியர் சுஜீவ அமரசேன வரவேற்புரை நிகழ்த்தினார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நிலந்தி டி சில்வா விருது வழங்கும் விழா தொடர்பில் விரிவான அறிமுகத்தை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்கலைக்கழகக் கட்டமைப்பினுள் நவீன ஆராய்ச்சி கலாசாரத்தை நிறுவுவதற்கு வழங்கும் சிறப்பான தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இலங்கையின் உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவினால் பாராட்டப்பட்டார்.

மிகச் சிறந்த மூத்த ஆராய்ச்சியாளர், மிகச் சிறந்த இளம் ஆராய்ச்சியாளர் மற்றும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளர் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில், 2022 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் மிகச் சிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதுகள், சுகாதார அறிவியல் மற்றும் சுதேச மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம், மானிடவியல், உயிரியல், முகாமைத்துவக் கல்வி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் இயற்கை அறிவியல், சமூகவியல் மற்றும் சட்டக் கல்வி ஆகிய எட்டு துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, பேராசிரியர் பி. ஏ. கே. எஸ். பெரேரா (மொரட்டுவ பல்கலைக்கழகம்), பேராசிரியர் டி. எம். தீப்தி யகந்தாவல (பேராதனைப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் அரோசா சரங்கி அதிகாரம் (கொழும்புப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் சாமன் ரஜீந்திரஜித் (கொழும்புப் பல்கலைக்கழகம்), எல். பி. டி. ஆர். பி. விஜேசுந்தர (களனிப் பல்கலைக்கழகம்) மற்றும் பேராசிரியர் எஸ். பி. கருணாநாயக்க (திறந்த பல்கலைக்கழகம்) ஆகியோர் சிறந்த மூத்த ஆய்வாளர் விருதைப் பெற்றனர்.

கலாநிதி ஏ. என். மதுசங்க (பேராதனைப் பல்கலைக்கழகம்), கலாநிதி கே. கே. அசங்க சஞ்சீவ (ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்), கலாநிதி டபிள்யூ. எச். எம். சஞ்சீவ சமரதுங்க (ரஜரட்ட பல்கலைக்கழகம்) வைத்தியர் எம். பி காவிந்த சந்திமால் தயாசிறி (களனிப் பல்கலைக்கழகம்), பேராசிரியர் ஏ. சந்தருவன் ரத்நாயக்க (ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்) ஆகியோர் மிகச்சிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருதைப் பெற்றனர்.

மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் ரங்கிக உமேஷ் ஹல்வத்துர சிறந்த புத்தாக்க விருதைப் பெற்றார்.

Share.
Exit mobile version