மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன் கொலனி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து வியாழக்கிழமை (8) முற்றுகையிட்டபோது கலன்களில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் மில்லி லீற்றர் கோடாவை மீட்டதுடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த பிரதேசத்தில் வீடுகளில் கசிப்பு உற்பத்தி செய்துவரும் நிலையங்களை சம்பவதினமான வியாழக்கிழமை மாலை பொலிஸாருடன் புலனாய்வு பிரிவினர் இணைந்து முற்றுகையிட்டனர். இதன் போது வீட்டின் அருகிலுள்ள பாழடைந்த காணியின் நிலத்தை தோண்டி அங்கு கலன்களில் கசிப்பு உற்பத்திக்கான கோடாவை புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை தோண்டி எடுத்தனர்.
இவ்வாறு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் மில்லி லீற்ற் கோடாவை மீட்டதுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட
உறவினர்களான அருகருகே அமைந்துள்ள வீடுகளைச் சோந்த 30,40,35, 50 வயதுடைய 4 பெண்களை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.