கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் புதிய முறைமையானது மக்களுக்கு இலகுவான முறை என்றாலும், பழைய முறைமையின் கீழ் புகைப்படங்களை எடுப்பது இல்லாமல் ஆக்கப்பட்டதால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நிபுணத்துவ புகைப்படத் தொகுப்பு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாகவும் இது அவர்களது வருமான வழிக்கு தடையாக இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் (08) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

7000 தொழில் நிபுணத்துவ புகைப்பட நிலைய உரிமையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து புதிய கடவுச்சீட்டு முறையின் கீழ் புகைப்பட நிலையங்களில் இருந்து புகைப்படம் பெறும் முறை இல்லாமல் போனதாகவும் அதனால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அங்கு கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதன்படி, நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்ததுடன், இந்த முறைமை பாரபட்சமற்ற வகையில் திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் மூலம் பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதால் நாட்டு மக்களுக்கும், தொழில்முறை புகைப்பட நிலைய உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Share.
Exit mobile version