பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.
புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பாக இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.
இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும் என்பதால், இவ்வாறான தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்புப் பிரிவினர் அண்மையில் புறக்கோட்டை பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல வகையான அழகுசாதனப் பொருட்கள், உள்நாட்டில் குறிப்பிடப்பட்ட எந்த உத்தரவாதமும் இல்லாதவை, தரமற்றவை மற்றும் சட்டவிரோதமாக பொதி செய்யப்பட்டவை என்று குறித்த பிரிவு தெரிவித்திருந்தது.
அதன் தரத்தை பரிசோதிப்பதற்காக 6 வகையான க்ரீம்களின் மாதிரிகள் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இது தொடர்பான பூச்சுகளில் அதிக அளவு பாதரசம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின்படி, ஒப்பனை கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்கக்கூடிய பாதரசத்தின் அங்கீகரிக்கப்பட்ட அளவு ஒரு கிலோவிற்கு ஒரு மில்லிகிராம் மட்டுமே.
ஆனால் சோதனை முடிவுகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவு பாதரசம் உள்ளது.
அதிக அளவு பாதரசம் உள்ள இவ்வகையான அழகுசாதனக் கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.