சில வங்கிகளில் அதிகாரிகள் மிகவும் மோசடியானவர்கள் என்றும் வேண்டுமென்றே கொடுக்கல் வாங்கல்காரர்களை ஏமாற்றி, சூழ்ச்சியான வகையில் அந்தச் சொத்துகளை தங்களின் ஆட்களையே அனுப்பி அவற்றை விற்கும் செயற்பாடுகள் நடக்கின்றன என்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும், தெரிவிக்கையில், “நாட்டின் அடகு சட்டத்தின் கீழ் சொத்துகளை வங்கி, நிதி நிறுவனத்தில் அடகு வைத்த பின்னர் அடகு பணத்தை மீளச் செலுத்த முடியாது போனால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இதில் மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளுக்கு விசேட சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்துன. அதன் உடன்படிக்கைக்கு அமைய அந்த வங்கிகளின் நிறைவேற்று சபையின் தீர்மானத்தின் ஊடாக அந்த சொத்துக்களை ஏலவிற்பனைக்கு விட முடியும்.

பின்னர் அது தொடர்பான சட்டத்தில் திருத்தத்தை கொண்டுவந்து தனியார் வங்கிகளுக்கும் அந்த சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்படியே இப்போது நடக்கின்றன.

இந்நிலையில் சில வங்கிகளில் அதிகாரிகள் மிகவும் மோசடியானவர்களே. வேண்டுமென்றே கொடுக்கல் வாங்கல்காரர்களை ஏமாற்றி, சூழ்ச்சியான வகையில் அந்த சொத்துக்களை தங்களின் ஆட்களையே அனுப்பி அவற்றை விற்கும் செயற்பாடுகள் நடக்கின்றன. இதேவேளை மத்திய வங்கியின் அனுமதியை பெற்றது என்று கூறப்படும் நிதி நிறுவனங்கள் பல உள்ளன.

அந்த நிறுவனங்களில் பலர் தமது வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடகு வைத்து பணம் பெறுகின்றனர். அதன்போது அவர்களின் காணிகள், வீடுகள் உள்ளிட்ட மற்றைய சொத்துக்களையும் எழுதிக்கொள்கின்றனர். அவற்றையும் அந்த பணத்தை மீள செலுத்திய பின்னரே கையளிப்பர்.

இதன்படி நொதாரிஸ் சட்டத்தில் திருத்தத்தை செய்துள்ளோம். ஆனால் பல நொதாரிசுகள் எந்தவித பொறுப்புகளும் இன்றி உரித்து போன்று எழுதுகின்றனர். இதன்படி இனி நொதாரிசுகள் உரித்துக்களை எழுதும் போது, கையளிப்பு உரித்தாக இருந்தால் அதன் கொடுக்கல் வாங்கல் நடந்தது என்பதனை உறுதிப்படுத்தியே அதனை எழுத வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தண்டனைக்கு உள்ளாகும் வகையில் சட்டத்தில் திருத்தம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் செய்யப்படும் என்றார்.

Share.
Exit mobile version