வங்கி கடனுக்கான வட்டி அதிகரிப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு குழுக்களுக்கு கடந்த வருடம் வரை எந்த பிரச்சினையும் இல்லாமல், கடன்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

இறுதியாக அதன் ஆறாவது குழுவின் பிரச்சினைகள் தொடர்பில், நாம் அமைச்சரவையில் பேச்சு நடத்தி முடிவொன்றை மேற்கொண்டு தீர்வை பெற்றுக்கொண்டோம்.

எனினும் ஏழாவது குழுவின் பிரச்சினைக்கான காரணம், நூற்றுக்கு 9 வீதமாக இருந்த வட்டி வீதம் 20 வீதமாக அதிகரித்தமையாகும்.
அந்தளவு வட்டி வீதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பதே அவர்களது பிரச்சினை ஆகும்.

அத்தோடு, இவ்விடயம் தொடர்பில் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும், அதற்கிணங்க இதுவரை இலங்கை வங்கி மூலம் மட்டும் வழங்கப்பட்டு வந்த கடன், இனி மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மூலம் பெற்றுக்கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவ்வங்கிகள் சமமாக பகிர்ந்துக் கொண்டு அக்கடனை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இவ்விடயம் குறித்து இலங்கை வங்கியுடன் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது, அதனையடுத்து மூன்று வங்கிகள் மற்றும் திறைச்சேரி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நிலையான வங்கி கடனுக்கான வட்டி வீதம் 15 வீதமாக குறைவடையலாம் என அண்மையில் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, இப்போதுள்ள 20 வீத வட்டி மேலும் குறைவடையலாம் என எதிர்பார்க்கிறோம்.
12வருடங்களுக்காக வழங்கப்படும் இந்த கடன்கள் தொடர்பில், மாணவர்களுக்கு சிறந்த அவகாசம் உள்ளது.
அவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை , ஓரிரு தினங்களில் இடம்பெறும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும்.” என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version