கொழும்பில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பேருந்துகளில் மாறுவேடத்தில் பயணித்து கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடும் குறித்த நபர் 5200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்து லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இருபது கைத்தொலைபேசிகள் திருடப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பேரூந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போவது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிலியந்தலை பொலிஸ் குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தினேஷ் ஹெட்டியாராச்சி கடந்த 6 மாதங்களாக அவதானம் செலுத்தியுள்ளார்.
சந்தேகநபரின் உருவம் அடங்கிய சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட பொலிஸார் பிலியந்தலை மிரிஸ்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தோற்றம் கொண்ட ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
வாதுவ பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிலியந்தலை பிரதேசத்திற்கு வந்தமை தொடர்பில் தெளிவான தகவல்களை வெளியிட தவறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நபர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சந்தேகநபரால் திருடப்பட்ட பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் கல்கிசை மற்றும் புறக்கோட்டை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.