நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத் தராதரப் சாதாரணத்தரப் பரீட்சையின் மூன்று பரீட்சை நிலையங்களில் மூன்று மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் கணித வினாத்தாளை ஆசிரியை ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் அனுப்பி பதில்களை வட்ஸ்அப் ஊடாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறுகிறார்.

மேலும், ஹெனேகம மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் இருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவத்தை பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

சீதுவ த்விஸ்மர வித்தியாலய பரீட்சை நிலையத்தில் ஐந்து பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version