இலங்கைப் பொலிசாரின் அலட்சியப் போக்கு காரணமாக , இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வந்த செல்வந்தர் ஒருவர் அநியாயமாக 14 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

இதனை இன்று வௌியான டெயிலி மிரர் பத்திரிகை செய்தியாக வௌியிட்டுள்ளது

குறித்த முதலீட்டாளர் ஒரு பலஸ்தீனர் ஆகும். ஹிக்கடுவை பிரதேசத்தில் ஹோட்டல் மற்றும் ரெஸ்டோரண்ட் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் முதலீடு செய்வதற்காகவே அவர் இலங்கை வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளது. அதுகுறித்து பொலிசில் முறைப்பாடு செய்வதற்காக சென்றவரை பொலிசார் பிடித்து உள்ளே தள்ளி பதினான்கு நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

அவரது கடவுச்சீட்டு காணாமல் போனாலும் அவர் ஒரு பலஸ்தீனர் என்றும், இந்நாட்டில் முதலீடு செய்யும் நோக்குடன் வந்துள்ளவர் என்றும், செல்லுபடியான கடவுச்சீட்டு மூலமாகவே இலங்கைக்குள் அவர் உட்பிரவேசித்துள்ளார் என்றும் பலஸ்தீன தூதரகம் இலங்கையின் அதிகாரிகள் பலருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் பலனிருக்கவில்லை

அதற்கு மேலதிகமாக பலஸ்தீன தூததரகம் உடனடியாக குறித்த நபரின் காணாமல் போன கடவுச்சீட்டுக்குப் பதிலாக புதிய கடவுச்சீட்டு ஒன்றையும் வழங்கியிருந்தது. அதற்கும் மேலதிமாக அவர் செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் வீசா என்பவற்றுடன் இலங்கைக்குள் சட்டபூர்வமாக உட்பிரவேசித்திருப்பதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் உறுதிப்படுத்தி இருந்தது.

எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாத பொலிசார், அவரை நீதிமன்றத்தில் குற்றவாளி போன்று ஆஜராக்கி பதினான்கு நாட்கள் விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்

இதுவிடயமாக டெயிலி மிரர் பத்திரிகைகக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தலையீட்டினை அடுத்து தற்போது அந்த பலஸ்தீனர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இல்லை என்றால் இன்னும் நீண்ட காலம் அவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

Share.
Exit mobile version