வவுனியா கணேசபுரம் பகுதியில், வர்த்தகரான பெண்ணொருவரின் வீட்டிற்குள் புகுந்த சந்தேகநபர், இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை லொறியுடன் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, கணேசபுரம் பகுதியில் 648 எரிவாயு சிலிண்டர்களுடன் லொறியொன்றை திருடிய நப​ரொருவர் சந்தேகத்தின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தகப் பெண் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த வர்த்தகப் பெண்ணின் மூத்த மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், எரிவாயு சிலிண்டர்களுடன் லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து கொண்டிருந்ததாகவும், வர்த்தகப் பெண்ணின் வீட்டில் லொறியை நிறுத்தியிருந்த போது, ​​வீட்டுக்கு வந்த சந்தேக நபர் வீட்டின் கதவுகளை உடைத்து எரிவாயு சிலிண்டர்களை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. .

திருடப்பட்ட லொறி மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் என்பன சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இன்னும் சில நாட்களில் வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையின் மரணத்தின் பின்னர் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் சந்தேகநபர் இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது தாயின் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் லொறியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே.திவுல்வெவ உள்ளிட்ட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share.
Exit mobile version