உயர்தர ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஆறாயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் தொடர்பில் இந்த ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (04) தெரிவித்துள்ளார்.

சுமார் ஆயிரம் பேர் தேசிய பாடசாலைகளுக்கும் எஞ்சியவர்கள் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனியாக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே போட்டிப் பரீட்சை நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட குழு முதற்கட்ட இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதுடன் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பாடசாலைகளில் உள்ள சுமார் முப்பதாயிரம் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரியும் பட்டதாரிகளை பணியமர்த்துவதற்கு அமைச்சு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அமைச்சினால் இறுதித் தீர்மானம் எடுக்க முடியவில்லை.

இது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் அமைச்சு தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்ற நிலையில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.

Share.
Exit mobile version