எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான களஞ்சியங்களினூடாக எரிபொருள் விநியோகத்தின் போது, 6,600 லீற்றர் கொள்ளளவு கொண்ட 582 எரிபொருள் பவுசர்களில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தின் போது முறைகேடு இடம்பெற்றிருப்பதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜயசேகரவினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.அதற்கமைய, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரை நான்கு மாத காலப்பகுதிக்குள் எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் விசாரணைப் பிரிவு, வர்த்தகப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவுகளுக்குச் சென்று குற்றவியல் விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அதன்போது எரிபொருள் இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்தில் மொத்தத் தொகையில் மாதிரியை பெற்றுக்கொள்ளுதல், தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுதல், விலைமனுக்கோரல், ஏலம் சமர்ப்பித்தல், அமைச்சரவையின் அறிக்கையிடல் என்பனவும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்போது, குறைந்தளவில் ஏலத்தை முன்வைத்த விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தை வழங்காமல் அதிக விலைக்கு விநியோகஸ்தர்களுக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளமை உறுதியாகியுள்ளது.

பிணைமுறிகளை வைத்துக்கொள்ளாமல் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்தமையே அதற்குக் காரணமென கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் கூட்டுத்தாபனத்திலிருக்கும் கணினி கட்டமைப்புக்கு மோசடியான முறையில் தரவுகளை உள்ளீடு செய்து இந்த ஊழல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏதாவதொரு நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளுக்கான கோரிக்கை கிடைத்தவுடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலில்லாமல் இன்னுமொரு நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.

முதலில் விலைமனுக்கோரல் முன்வைத்த அனுப்பி வைக்கப்பட்ட எரிபொருள் பவுசரிலிருந்த எரிபொருள் தொகை மீண்டும் களஞ்சியத்துக்கு வந்துள்ளதாக கணினி கட்டமைப்பில் உள்ளீடு செய்துவிட்டு, மீண்டும் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கே எரிபொருள் பவுசரை அனுப்பி வைத்து, அந்த பவுசர் மீண்டும் களஞ்சியத்துக்கு வந்துள்ளதாகத் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு, 582 சந்தர்ப்பங்கள் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கொலன்னாவை களஞ்சியம், முத்துராஜவல மற்றும் 09 மாகாணங்களிலுமுள்ள பிரதேச களஞ்சியங்களில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் எரிபொருள் கூட்டுத்தாபனம் தலையிட்டு கொலன்னாவை களஞ்சியத்தினூடாக எரிபொருள் விநியோக செயற்பாடு கணினி கட்டமைப்பினூடாக, தவறான தரவை உள்ளிட்டு இவ்வாறு முறைக்கேடு செய்துள்ளதாகவும், கணினி கட்டமைப்பிலுள்ளது போன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பிலும் அந்தக் காலப்பகுதிக்குள் எரிபொருள் இறக்குமதி செய்வதற்குத் தேவையான கொள்முதல் செயற்பாடுகள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி அதுதொடர்பில் அறிக்கையை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்துக்கு பெற்றுக்கொடுக்குமாறும் அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர எரிபொருள் கூட்டுத்தாபனத்திள் தலைவர் மொஹமட் உவைஸுக்கு அறிவித்துள்ளார்.

ஆனால், கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இதுவரையில் அவ்வாறானவொரு பரிசோதனை இல்லை என்பதுடன், 2010 ஆம் ஆண்டு அந்தப் பரிசோதனைக் கட்டமைப்பு பொருத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் அதுதொடர்பில் எவ்வித கணக்காய்வும் முன்னெடுக்கப்படாமையினால் இவ்வாறான ஊழல்கள் இடம்பெறுகின்றதாகப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share.
Exit mobile version