யாழில் போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 வயதான சிறுவன் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.துன்னாலை தெற்கு- வேம்படியை சேர்ந்த 10 வயதான சிறுவன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்னார்.

இந்த சிறுவன் கடந்த ஒரு வருடமாக பாடசாலை செல்லவில்லை. தந்தையார் குடும்பத்தை பிரிந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தவர். தற்போது தாயாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், அந்த பகுதியிலுள்ள போதைக்கு அடிமையான இளைஞர்களுடன் சுற்றித்திரிந்துள்ளார்.

போதைக்கு அடிமையான இளைஞர்களுடன் சகவாசம் வைத்திருந்ததால், 10 வயதுக்குரிய சிறுவனின் இயல்புகளுடன் இல்லாமல், வளர்ந்த மனிதர்களை போலவே சிறுவன் செயற்படுகிறார். சற்றும் பயமில்லாத இந்த சிறுவனை பயன்படுத்தி, அந்த பகுதி போதை இளைஞர்கள் பல திருட்டுக்களை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சிறுவன் போதைப்பாவனையில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதேபோல, கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் வழங்கிய தகவலிலும், இந்த சிறுவன் போதைப்பாவனையாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சிறுவன் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சாவகச்சேரி நீதிமன்றத்தாலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் சிறுவனை நெல்லியடி பொலிசார் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.சிறுவன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, போதைக்கு அடிமையான இளைஞர்களுடன் சுற்றித்திரிவதாக சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட போது, சிறுவனின் சிறுநீர் மாதிரி சோதனையில் போதைக்கு அடிமையானதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

நீதிமன்றம், சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட போது, விருந்தினர் வீடுகளுக்கு செல்பவரை போல சாகவாசமாக சென்று வந்துள்ளார்.
பொலிசாரினால் கைது செய்யப்பட்டதும், “என்னை நீங்கள் தொட முடியாது. தெரியும் தானே. என்னை அடித்தால், ஜட்ஜிடம் கூட்டிப்போகும் போது சொல்லிவிடுவேன்“ என சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் வீட்டில் தங்கியிருந்தால் திசைமாறி சென்றுவிடுவார் என்ற அடிப்படையில் தற்போது அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பாடசாலையொன்றில் இணைக்கப்படுவார் என நெல்லியடி பொலிசார் தெரிவித்தனர்.இதேவேளை, சிறுவன் கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், சிறுவன் வசித்த பகுதி கிராமசேவகர் போன்றவர்கள் முறையாக கவனம் செலுத்தி, பாடசாலையிலிருந்து இடைவிலகிய சிறுவனை அடையாளம் காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version