பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் தடங்கல்கள் எதுவுமில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான அளவு எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று எரிபொருள் கொள்கலன் விநியோக உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்தார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க, பௌர்ணமி தினத்திலும் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகச் செயற்பாட்டில் ஈபட்டுள்ளதோடு மேல் மாகாணத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் சனிக்கிழமை (3) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 31 ஆம் திகதியன்று நள்ளிரவு எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்து.

எரிபொருளின் விலை குறைக்கப்படுவதை முன்கூட்டி கணித்திருந்த எரிபொருள் விநியோகஸ்தர்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனங்களிடம் எரிபொருள் கொள்வனவில் ஈடுபடாமல் இருந்தமையே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்வதான நிவாரணங்களை அரசாங்கம் வழங்குமென உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் பலனாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த எரிபொருள் விநியோகத்துக்காக 350 கொள்கலன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஐ.ஓ.சி. நிறுவனத்தின் 125 கொள்கலன்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, நாட்டில் அநேகமான பகுதிகளில் ஏற்பட்டிருந்த எரிபொருள் தட்டுபாட்டுக்கான சூழல் குறைவடையுமென நம்புகிறோம்.

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னெடுத்து வரப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Share.
Exit mobile version