உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸின் பில்கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த முன்வந்துள்ளது.
விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் விவசாயத்தை அதிகரிக்க பில்கேட்ஸ் அறக்கட்டளை முன்வருவதுடன் இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நாட்டில் விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 250 மில்லியன் டொலர்கள் மானியம் பெறப்பட்டுள்ளதுடன், நெல் மற்றும் ஏனைய பயிர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக விவசாயத் துறையில் தரவுகளை சேகரிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அதிகாரிகள் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது இந்தத் திட்டத்திற்கு தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உரப் பாவனையின் மூலம் உற்பத்தித் திறனை நேரடியாகப் பெறுவதற்கும் பெறப்பட்ட உற்பத்தித் திறனைப் பேணுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை புதிய மென்பொருள் வழங்கும் என ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, பில் கேட்ஸ் அறக்கட்டளை சமூக பாதுகாப்பு அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதில் உறுதியாக உள்ளது.
இது தவிர, நாட்டின் நிதி அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான துறைகளும் இந்த மென்பொருள் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
மேலும், இது அரசின் கொள்கைகளைத் தயாரிக்க உதவும் என்றும் முதற்கட்ட விவாதத்தில் தெரியவந்துள்ளது.
இந்த செயற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெறும்.