நாட்டில் தொற்றா நோய்களின் பரவல் அதிகரிப்புக் காரணமாக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுகளை உட்கொள்வதில் அவதானம் தேவையென சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பெற்றோர் தமது குழந்தைகளின் போஷாக்கு குறித்து அக்கறைகொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக சந்தையில் விற்கப்படும் குளிர்பானங்கள் ஆபத்தை விளைவிக்க லாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி நயனா மகோத ரத்ன ஊடகங்களுக்கு நேற்று (31) கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் போல உணவு வகைகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும். பச்சை சிறந்த தெரிவாகவும் மஞ்சள் அவதானத் தெரிவாகவும் சிவப்பு கட்டுப்பாட்டுத் தெரிவாகவும் கொள்ள வேண்டும். பச்சைவகை உணவுகள் ஊட்டச்சத்துகளின் ஆதாரங்கள். மஞ்சள் உணவு, பானங்களைத் தெரிவுசெய்யும்போது அவதானம் தேவை. அத்துடன் சிவப்பு நிற உணவு, பானங்கள் அவசியமற்றவை. அவற்றைக் கட்டுப்பாட்டுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் பல பாகங்களிலும் தொற்றா நோய்கள் பரவுகின்றமையால் சர்க்கரை, கொழுப்பு, உப்பு உணவுகளில் மிகுந்த அவதானம் தேவை. சிறுவர்கள், இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உணவு வகைகளை உண்ணவேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version