நாட்டிற்கு பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்திய முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு உத்தியோகபூர்வ கோரிக்கையை விடுக்க பாராளுமன்றக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஆனாலும், அவர் எம்.பி. பதவியில் இருந்து விலகத் தயாராக இல்லை என்று தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், அவரை பதவி விலக உத்தியோகபூர்வாக வலியுறுத்த தீர்மானித்ததாக தெரிவித்தார்.

“ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவர் (ரஹீம்) செய்தது கண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ரஹீம் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா அல்லது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா? என்பது பிரச்சினை அல்ல” என காரியவசம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அத்தகைய கோரிக்கையை கருத்தில் கொண்டு அவர் பதவி விலக போவதில்லை என தெரியவருகிறது.

இது குறித்து தி டெய்லி மோர்னிங் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள ரஹீம், தாம் அவ்வாறு செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

“எனக்கு அவ்வாறான எந்த கோரிக்கையும் வரவில்லை, மேலும் இராஜினாமா செய்யும் திட்டமும் இல்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஹீமுக்கு எதிராக பாராளுமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறிய பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

“சட்டப்படி, பாராளுமன்றத்தால் எதுவும் செய்ய முடியாது. இது நீதிமன்ற மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

Flydubai FZ 547 விமானத்தில் வந்த ரஹீம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டபோது, ​​மிக முக்கியமான பிரமுகர்களின் (VIP) முனையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரிடமிருந்து ரூ. 74 மில்லியன் பெறுமதியான 3.397 கிலோ தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்டுகளும் ரூ. 4.2 மில்லியன் பெறுமதியான 91 ஸ்மார்ட்போன்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து, அவருக்கு சுங்கத்தால் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு அதனை செலுத்தியதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

Share.
Exit mobile version