பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன வலியுறுத்தினார்.
சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசேடமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது சிறுவர்களின் அடையாளங்கள் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது தமது நிறுவனம் தரத்தை பின்பற்றுவதாக அரச ஊடகங்களின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அதற்கமைய, இது தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு ஒன்றியத்தின் அடுத்த கூட்டத்துக்கு அனைத்து ஊடகங்களுக்கும் அழைப்புவிடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக, இந்நாட்டில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலைமையை உயர்த்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, குறைந்தபட்ச தரநிலைகளில் உரிய நிறுவனங்களை நடத்துதல், சிறுவர்களை பராமரிக்கும் பணியாளர்களின் பற்றாக்குறை, இந்நிறுவனங்களின் சுகாதாரப் பராமரிப்பு இன்மை, சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறுவர் இல்லங்களை முறையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவது போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதன் முக்கியத்தும் தொடர்பில் இதன்போது விரிவாக முன்வைக்கப்பட்டதுடன், 18 வயதைத் தாண்டிய சிறுவர்களை சமூகமயப்படுத்துவதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்றின் தேவை மற்றும் அவர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டது.