ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று பல்கலைக்கழகத்திற்கான கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட அவர், இவ்வருடம் உயர்தர விஞ்ஞானப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் முதன்முறையாக 50 புதிய மருத்துவ மாணவர்களை பீடத்திற்கு இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 200 மில்லியன் ரூபா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆய்வகங்கள் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகளில் நடைமுறை பயிற்சிகளை அபிவிருத்தி செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவ பீடத்தின் அடிப்படைத் திட்டங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் பதுளை மாகாண வைத்தியசாலை மருத்துவ மாணவர்களின் பயிற்சி மற்றும் மருத்துவப் பணிகளுக்கான போதனா வைத்தியசாலையாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இப்பிரதேசத்தில் வைத்தியர்களாக ஆவதற்குத் தகுதியுடைய பிள்ளைகள் மற்றும் மாகாணத்திலுள்ள பிள்ளைகள் தமது வீடுகளில் இருந்து வந்து தமது கனவுகளை நனவாக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.