நாட்டில் எரிபொருள் விலையானது அடுத்த வாரம் மேலும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாதாந்தம் முதலாம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்படும் திருத்தத்துக்கு அமைவாக எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் விலையானது மேலும் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாக மின்சக்தி அமைச்சின் அதிகாரியொருவர் அய்வரி செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த அறிவிப்புக்கு அமைவாக, அடுத்த வாரம் இடம்பெறும் வாராந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சந்தையில் தற்போதைய எரிபொருள் வீழ்ச்சி மற்றும் அண்மைய நாட்களான அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் அதிகரிப்பும் இம்முறை எரிபொருள் விலை திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்படுகிறது.
இன்றைய (27) நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் அமெரிக்க மசகு எண்ணெய் விலை 72.67 அமெரிக்க டொலர்களாகவும், ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் 76.95 அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறது.
அதேநேரம் நேற்றைய (26) இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபர அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 295.62 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எனவே மேற்கண்ட விடயங்களின் சாதகமான போக்கும் எரிபொருள் விலை குறைப்புக்கான சாத்தியத்தை வெளிக்காட்டுகின்றது.
கடந்த மாத (ஏப்ரல் 30) எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், புதிய விலை 310 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க QR முறைமையின் கீழ் தற்போது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கம் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையிலும் அடுத்த வாரம் மாற்றம் மேற்கொள்ளப்பட போவதாகவும் நம்பகத் தகுந்த தகவல்கள் உறுதிபடுத்தியும் உள்ளது.
எனவே அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பான மேலதிக அறிவிப்புக்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்புக்கு அமைய, அதன் பலனை ஏனைய துறைகளிலும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.