கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஐபி பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் விமானப் பயணிகளின் பயணப் பொதிகளை பரிசோதிப்பதற்காக அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இருப்பதாகவும், ஆனால் பிரமுகர் பயணிகள் முனையத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை எனவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சிறப்பு பயணிகள் முனையம் வழியாக வரும் விஐபிக்களின் லக்கேஜ்கள் சோதனை செய்யப்படுவதில்லை என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வெளிநாடுகளில் உள்ள சிறப்பு பயணிகள் முனையங்களிலும், சிறப்பு விசேட பயணிகள் முனையங்களிலும் உயர் தொழில்நுட்ப ஸ்கேன் ஆய்வு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஐபி முனையத்தினூடாக சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, விசேட பயணிகள் மற்றும் பிரமுகர்களுக்கான புறப்பாடு முனையத்திலும் இந்த சாதனங்களை நிறுவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் இலங்கை சுங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ராஹீம் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கம் மற்றும் ஒரு தொகை கையடக்க தொலைபேசிகளுடன் சுங்க அதிகாரிகளால் கடந்த 24ம் திகதி கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.