கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு கால அவகாசம் காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒன்லைன் ஊடாக திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதனால் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமுகமளித்தோ அல்லது மின்நகலினூடாகவோ அதனை செய்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை மண்டபங்களுக்கு சென்று திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அதனூடாக சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார். இதேவேளை, எவ்வித காரணங்களுக்காகவும் சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை அதிபர் வழங்கவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு அவர்களின் உரிமைகளை மறுக்க வேண்டாம் எனவும் அனுமதிப் பத்திரங்களை உடனடியாக மாணவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அதிபர்களை அறிவுறுத்தியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

Share.
Exit mobile version