நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இவ்விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அரச மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
“குறிப்பாக கிளினிக்குகளில், நோயாளிகள் வெளியில் இருந்து மருந்துகளை வாங்குவதற்கு வைத்தியர்கள் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். மேலும், தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் மருந்துகளால் சில நோயாளிகள் சரியான அளவை எடுத்துக் கொள்வதில்லை. இது ஒரு பாரிய பிரச்சினை, இது விரைவில் தீர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பற்றாக்குறை நிலவுகிறது; எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது,’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடையாளர்கள் அரசாங்கத்திற்கு மருந்துகளை வழங்கும் செயல்முறையும் பல தடைகள் காரணமாக தடைபட்டுள்ளது.
இதேவேளை வலிநிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோயாளிகளுக்கான மருந்துகள் உட்பட 120 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளிலும், அரச மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மேலும், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்களுக்கும் தட்டுப்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
14 உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. எனினும் கூட, நிலவும் மருந்துப் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார்.
மேலும், நிதிப்பற்றாக்குறை, கொள்முதல் முறையில் உள்ள சிக்கல், தெளிவின்மை,விநியோகஸ்த்தர்களின் ஏகபோகம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்போதைய மருந்து தட்டுப்பாடுக்கான காரணங்களாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவமனைகளில் மொத்தம் 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவமனைகள் 2022 முதல் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.