கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் கண்காணிக்கக்கூடிய கடப்பாடுகளில் 25 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது.
இருப்பினும், முக்கியமான கடமைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக வெரிடே (Verite) தமது ஆய்வில் தெரிவித்துள்ளது.
முதலாவதாக, குறிப்பிடத்தக்க தகவல் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, மார்ச் மாத இறுதி வரை, மதிப்பீட்டிற்கு போதுமான தகவல்கள் கிடைக்காததால் அடையாளம் காணப்பட்ட 10 சதவீத உறுதிப்பாடுகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு உறுதிமொழிகளை இலங்கை தவறிவிட்டது.
இவற்றில் முதலாவது பந்தயம் (Betting) குறித்த வரிகளின் அதிகரிப்பு தொடர்பானது.
வரிகளை அதிகரிப்பதற்கான திருத்தம் 2023 ஏப்ரல் 04 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்தத் திருத்தம் இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.
இரண்டாவது, மத்திய வங்கி சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவது தொடர்பானது. பந்தயம் திருத்த யோசனையை போன்றே இந்த யோசனையும் 2023 மார்ச் 07 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. எனினும், இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை.
இதேவேளை, கடந்த மார்ச் 31 ஆம் திகதிக்குள் வெளிப்படைத்தன்மையுடனான இணையத்தளத்தை நிறுவுவதில் இலங்கை தனது ஆளுகைக் கடமைகளில் ஒன்றை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது.
(i) குறிப்பிடத்தக்க பொது கொள்முதல் ஒப்பந்தங்கள், (ii) முதலீட்டு சபையின் மூலம் வரி விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் (iii) சொகுசு வாகன இறக்குமதியில் வரி விலக்கு பெறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைப் பற்றிய தகவல்களை அரையாண்டு அறிக்கையை இந்த இணையத்தளம் வழங்குகிறது.
எனினும், ஏப்ரல் மாதம் நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் (ii) மற்றும் (iii) தொடர்பான தகவல்கள் குறித்து வெளிப்படைத் தளம் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.