ரயில் ஆசன ஒதுக்கீட்டினை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அனைத்து மோசடிகளையும், ஊழலையும் தடுத்து நிறுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.
வாய்மொழிப் பதில்களை எதிர்பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பஸ் கட்டணத்தை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக ரயில் கட்டணத்தை பேணுவது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அதற்காக முடிவெடுப்பதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும், ரயில்வே திணைக்களத்தை திறம்பட நடத்துவதற்கு திணைக்கள முறைக்கு அப்பாற்பட்டு அதிகார சபையாக மாற்றப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.