மேற்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் இறுதி மதிப்பாய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட பணிகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது, மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன்படி, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தினார்.

மேற்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் 2016 இல் தயாரிக்கப்பட்டது. இது சிங்கப்பூர் நகர வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் இந்த மாவட்டங்கள் பொருளாதார, வணிக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.

இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு இந்த அபிவிருத்தித் திட்டத்தை மேம்படுத்தி, அதன் இறுதி மீளாய்வை அடுத்த மாதத்திற்குள் விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.

Share.
Exit mobile version