கம்பளை தொலுவவில் 15,000 குடும்பங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த நீரைக் குடித்த 14 வயதுடைய பாடசாலை மாணவியும் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை தொலுவ பிரதேச மக்கள் பயன்படுத்தும் 31 நீர் ஆதாரங்களிலும் மலம் கலந்துள்ளதாக கம்பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், திம்புலாகல பிரதேசத்தில் உள்ள சிறிபுர, நுவரகல மற்றும் வெஹெரகல ஆகிய கிராமங்களுக்கு நீர் வழங்கும் குடிநீர் தாங்கிகளில் காலாவதியான குளோரின் கலக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
7,000 குடும்பங்களைச் சேர்ந்த 25,000 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உள்ளூராட்சி சபையினால் வழங்கப்படும் நீரைப் பருகுவதைத் தவிர்த்து முடிந்தவரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகுமாறும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் போகம்பர சிறைச்சாலையின் கழிவுகள் மகாவலிக்குள் கொட்டப்படுவதாகவும், மகாவலியில் உள்ள நீர் பாரியளவில் மாசடைந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.