நுகர்வோரின் நலனுக்காக ஆதரவாக முன் நின்று செயற்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், சுயாதீன ஆணைக்குழுவில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க முடியாது எனவும், மக்களின் எதிரான அரசாங்கத்தின் இந்த பிரேரணையை தோற்கடிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் பிரகாரம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும், பெரும் வாழ்க்கைச் செலவால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு ஆதரவாக முன்நின்ற தலைவரை பதவி நீக்கம் செய்வது மக்களுக்கு விடுக்கும் மரண அடியாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சார சபையின் நிர்வாக சீர்கேடு,ஊழல் மற்றும் மோசடியால் ஏற்படும் நஷ்டத்தை போக்க மின்சார நுகர்வோர் மீது சுமத்தும் விலையேற்றத்தை சுட்டிக்காட்டியமையே ஜனக ரத்நாயக்கவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பிரதான காரணம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தருணத்தில் தேவைப்படும் ஒருவரைப் பாதுகாப்பதை விட, நுகர்வோர் சார்பாக அவர் எடுத்துக்கொண்ட கொள்கை நிலைப்பாடும், போராட்டமுமே வெற்றிபெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீர்திருத்தங்களுக்கு அவகாசம் இருப்பினும் தூரநோக்கற்றவிதமாக இவ்வாறு மின் கட்டண அதிகரிப்பை ஏற்படுத்தாது யதார்த்தபூர்வமாக விஞ்ஞானபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டு மக்களின் பக்கம் இருந்தும் நுகர்வோரின் பக்கமிருந்தும் தாம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினர் மற்றும் தொழில் முயற்சியாண்மையினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (22) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொது விவகாரங்களில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்த எதிர்க்கட்சிகளின் சர்வகட்சி ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Exit mobile version