சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.

இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுள்ளன.

எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகள் தவிர பாராளுமன்றம் கூடும் ஏனைய நாட்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டது.

பாராளுமன்றம் மே 23ஆம் திகதி மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2312/67 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2312/68 67 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2312/70 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அது மாத்திரமன்றி புகையிலை வரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் 2312/71 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், முத்திரைத் தீர்வைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 2312/73 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2316/32ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி, 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் 2309/37 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை என்பனவும் அன்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

மே 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின்படி தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர் ஜே.டபிள்யு.எம்.ஜே.பி.கே. ரட்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை நிறைவேற்றப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதியிலிருந்து ஓய்வுபெறவுள்ள பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவின் சேவையைப் பாராட்டி பாராட்டுப் பிரேரணைக்காக மே 25ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பி.ப 12.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான 2309/37 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் 2312/80 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் 2312/69 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை, 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் 2312/69 ஆம் இலக்க மற்றும் 2318/53 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள் என்பன அங்கீகரிக்கப்படவுள்ளன.

அத்துடன், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் செக் குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமான 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமும் அன்றையதினம் அங்கீகரிக்கப்படவுள்ளது.

அதன்பின், மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பிரேரணைக்கு எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாள் முழுவதையும் ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Share.
Exit mobile version