முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கொழும்பு உயர் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்துள்ளது.

சிவலிங்கம் ஆரூரன் என்ற பொறியியலாளர், கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தல சந்தியில் வைத்து கோட்டாபய ராஜபக்ச மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த வழக்கு நேற்று (மே 16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க குற்றம் சாட்டப்பட்டவரை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சிசில் டி சில்வா முன்னிலையில் வழங்கப்பட்ட வாக்குமூலத்தைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த உண்மைகளை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்க உத்தரவிட்டது.

Share.
Exit mobile version