இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான மிக மோசமான காலம் இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வாக்குறுதியளித்த பணம் கிடைத்தவுடன் நாட்டுக்கு மருந்து விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக, இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்ததாகவும், இந்தியாவிடமிருந்து சாதகமான கருத்துக்களைப் பெற்றதாகவும் கூறினார்.

சில மருந்துகளை கொழும்புக்கு வெளியில் உள்ள வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version