அனர்த்தம் இடம்பெற்று 23 மாதங்களுக்கு மேலான நிலையில், கொழும்பு கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் சிங்கப்பூர் உரிமையாளரது சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியுள்ளமை தொடர்பில் சட்டமா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் கெமிந்த பெரேரா முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த சட்டத்தரணியிடம் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தது.

குறித்த கப்பல் நிறுவனம், தனது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக சட்டத்தரணி ஒருவரை திடீரென அனுப்பியுள்ளமையானது, சம்பவம் தொடர்பான விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி என்று சட்டமா அதிபர் தரப்பு மன்றில் தெரிவித்தது.

கப்பலின் தலைவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், கப்பல் உரிமையாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை உறுதிப்படுத்தும் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேலதிக நீதிவான், கப்பலின் உரிமையாளரின் நலன்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, வழக்கு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதத்துக்கு நட்டஈடுக் கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version