மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பல வருடங்களாக வருமான உரிமத்தைப் புதுப்பிக்காத சுமார் 2.3 மில்லியன் வாகனங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் தரவுத்தளத்தை சரிபார்த்து அவ்வாறான வாகனங்களின் விபரங்களை வழங்குமாறு திணைக்களம் ஒன்பது மாகாணங்களின் பிரதம செயலாளர்களிடம் வினவியுள்ளதாக ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில், இதுபோன்ற வாகனங்களை கண்காணித்து அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிவிக்க மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் விபரங்களை வழங்குவதற்கு தலைமைச் செயலாளர்கள் ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே க்யு.ஆர் குறியீட்டு எரிபொருள் அமைப்பிற்கு பதிவு செய்துள்ளதாக திணைக்களம் கண்டறிந்ததையடுக்கு வாகனங்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் போவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த வாகனங்களை அதன் தகவல் அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் எச்சரித்துள்ளது.

Share.
Exit mobile version