கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை கலைப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசரகால சூழ்நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த முன் பயிற்சிக்காக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்று முதல் வரவழைக்கப்பட்டனர்.

பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், தீயணைப்புப் பிரிவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து ´அத தெரண´ மேற்கொண்ட வினவலுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

சில நாசவேலைகள் இடம்பெறுவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் காரணமாக கொழும்பில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

எவ்வாறாயினும், வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு படையினரை கலைக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version