சவூதி அரேபிய இராச்சியமானது தனது குடிமக்கள் மற்றும் சகோதர மற்றும் நட்பு நாடுகளின் பிரஜைகளை சூடானிலிருந்து வெளியேற்றும் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளதாக இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் சவூதி அரேபியாவிடம் முன்வைத்த வேண்டுதல்களுக்கு இணங்கவும் இவ்வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சவூதி இராச்சியத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வெளியேற்ற நடவடிக்கைகளின் போது மொத்தமாக 8,455 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இவர்களில் 404 சவூதி குடிமக்களும், 32 இலங்கையர்கள் உட்பட 110 நாடுகளைச் சேர்ந்த 8,051 பேர்களும் உள் அடங்குவர்.
இவர்கள் சவூதி அரேபிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் சவூதி அரேபிய விமானப்படை விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
அவ்வாறே சவூதி அரேபியா, தனது சகோதர மற்றும் நட்பு நாடுகளின் 11184 பிரஜைகளை சூடானிலிருந்து வெளியேற்றி சவூதி அரேபியாவிற்குள் கொண்டுவருவதற்கும் பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் உதவியது மட்டுமின்றி அவர்களது வெளியேற்ற நடவடிக்கைகள் தொடக்கம் அவர்கள் தத்தமது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் வரையான அணைத்து நடவடிக்கைகளுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்பையும் உதவிகளையும் நல்கியது.
சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், இவ்வெளியேற்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள ஒத்துழைத்த சூடான் சகோதர மக்களுக்கும் , அவ்வாறே இந்நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொள்ள ஒத்துழைத்த அனைத்து சகோதர மற்றும் நட்பு நாடுகளின் அரசாங்கங்களுக்கும், சவூதி அரேபிய அரசாங்கத்தின் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதற்காக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
அதேவேளை , மன்னர் சல்மான் நிவாரண மையம், சூடான் மக்களுக்கு உதவுவதற்காக சவூதி அரேபிய விமானப் பாலத்தினூடாக வெள்ளிக்கிழமை (12) வரை உணவுப்பொருட்கள், கூடாரங்கள், மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய ஐந்து நிவாரண விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் தலைமையில், உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி அவர்கள் கெளரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்காக உதவும் திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களது துன்பங்களைத் தணிப்பதில் சவூதி அரேபிய அரசு காட்டிவரும் ஆர்வத்தையும் சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி உறுதிப்படுத்தினார்.