ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தை (FUTA) சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.
ஜனாதிபதி மற்றும் FUTA பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இம்மாதம் 18 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல மாதங்களாக உயர்தர விடைத்தாள் மதிப்பீடுப் பணியை புறக்கணித்த நிலையில், ஜனாதிபதியுடன் கலந்துரையாட விரும்பினர்.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஜனாதிபதி கேட்டால் மாத்திரம் ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை எதிர்கொண்டு, கடந்த திங்கட்கிழமை (8) முதல் விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பித்தனர்.