தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது நேற்று (09.05.2023) வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த சில நாட்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், வட அகலாங்குகள் 02N இற்கும் 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டி கொள்ளப்படுகிறீர்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 – 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 – 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version